
ஸ்ரீ ஐயப்பன் கோவில், சபரி நகர்
சென்னை, போரூர் சபரி நகரில், கலியுகத்தில் சாதி மத பேதமின்றி அருள்பாளிக்கும் ஸ்ரீ ஐயப்பன் 1991 இல் எழுந்தருளியுள்ளார். இந்த ஐயப்பன் ஆலயத்தில், வரசித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள், ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர்,ஸ்ரீ கனகதுர்க்கை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ சொர்ண பைரவர் தனித்தனி ஆலயமாக சந்ததியில் அருள்பாளிக்கிறார்கள். மேலும், கோஷ்ட தேவதைகளான தட்சிணாமூர்த்தி லிங்கோத்தபவர் பிரம்மா சண்டிகேஸ்வரர் வேணுகோபால் மகாவிஷ்ணு ராமர் நாகர் அரசமர விநாயகர் நவகிரகம் மற்றும் காரியசித்தி ஸ்ரீ சாய் பாபாவும் அருள்பாளிக்கிறார்கள்.

சன்னதி மற்றும் வழிபாடுகள்
விநாயகருக்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். பக்த கோடிகள் அனைவரும் பங்கேற்று, அன்று மாலை விநாயகர் வீதி உலா நடைபெறும். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை, வழிபாடு செய்து பல வெற்றிகளை வாழ்வில் கண்டுள்ளனர். இக்கோவிலில் பிரதான மூலவராக ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜை, மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெறும். வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் மகர ஜோதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இவ்வாலயத்தில் வந்து மாலை போட்டு கொள்வார்கள். கார்த்திகை, தனுர் மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். மாலையில் பஜனைகள், பாடல்கள் வெகு விமர்சையாக நடைபெற்று, மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு பக்தர்கள் இந்த அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்வர். ஒன்பதாவது வாரம், ஸ்ரீ மணிகண்ட பக்த சபா குழுவினர் சிறப்பு வழிபாடு செய்வர். காலையில் அபிஷேகம், கணபதி ஹோமம், உச்சி கால பூஜை, அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்காரம், ராஜா அலங்காரம், உற்சவமூர்த்தி வீதி உலா புறப்பாடு நடைபெற்று, அன்னதானம் நடைபெறும். மேலும், தனுர் மாதத்தில் ஐயப்பனுக்கு நிறை மணி சேவையும், புஷ்பாஞ்சலியும் நடைபெறும். சபரிமலைக்கு செல்லும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்தில் இருமுடி கட்டி பூஜை செய்து கிளம்புவார்.
ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் அருள் பாலிக்கின்றார். வருடந்தோறும் வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறும். திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் மற்றும் கனகதுர்க்கை ஆகியோருக்கு நவராத்திரி தினங்களில் காலையில் அபிஷேகங்களும், மாலையில் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். உற்சவமூர்த்திக்கு நவராத்திரி 10 தினங்களும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். நவராத்திரி பத்து நாட்களும், நகரில் உள்ள மகளிர், குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு, இத்திருக்கோவிலில் பாடல் கச்சேரி, பரதநாட்டியம் என விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். ஒன்பதாவது நாள், மாடவீதியில் மகிஷாசுரமர்த்தினி வதம் நடைபெறும். பத்தாவது நாள், நிறை மணி சேவை என்ற காய்கறி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். கனகதுர்க்கை சன்னதியில் திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெறும்.
அடுத்து, பக்த ஆஞ்சநேயர். வருடம் தோறும் பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று காலை சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். வெள்ளிக்கவசம், வெண்ணை காப்பு, வெற்றிலை மாலை போன்றவை அணிவிக்கப்படுவது சிறப்பு. பஜனை, பக்தி பாடல்கள், ராம நாம ஜெபம் போன்றவை நடைபெற்று, ஏழு மணியளவில் மகா தீபாரதனையும், பின்னர் அன்னதானமும் நடைபெறும். மாதந்தோறும் மூல நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வியாழன், சனி போன்ற நாட்களில் பக்தர்கள் வெற்றிலை மாலை சாத்தியம், தீபங்கள் ஏற்றியும் வழிபடுவர்.
ஆலயத்திற்கும், நகரத்திற்கும் காவல் தெய்வமாக கால பைரவர் அருள்பாலிக்கின்றார். பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருப்பது சிறப்பு. மாதத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நோய்கள், கடன்கள் தீருவதற்கு தேய்பிறை அஷ்டமியிலும், தொழில் பொருளாதாரம் மேன்மை அடைய வளர்பிறை அஷ்டமியிலும் வழிபாடு மேற்கொள்கின்றனர். நவகிரக சந்நிதியிலும் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திருக்கோயிலின் தல விஷமாக அரச மரமும், வேப்ப மரமும் இயற்கையாகவே வளர்ந்துள்ளது; அதி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தல திருஷ்டங்களின் கீழ் சித்தி புத்தி விநாயகர் மற்றும் நாகர் அருள்பாலிக்கின்றனர். திருமணமாகாத கன்னிப் பெண்கள் இவ்விடத்தில் வேண்டிக் கொண்டு மஞ்சள் பால் போன்ற அபிஷேக பொருள்களினால் அவர்கள் கையாலேயே 48 நாட்கள் விநாயகர், நாகர் இவர்களுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.